செய்திகள்

இரணியல் அருகே காய்கறி வியாபாரி மர்ம மரணம்

இரணியல் அருகே வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி காய்கறி வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

இரணியல்:

இரணியல் அருகே ஆத்தி விளையை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 55). இவரது மனைவி விஜிலா. இந்த தம்பதியின் மகன் முருகன். இவருக்கு திருமணமாகி இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் முருகன் தனது மனைவிக்கு ஸ்கேன் எடுப்பதற்காக நாகர்கோவிலுக்கு சென்று இருந்தார். அங்கு ஸ்கேன் எடுத்துவிட்டு மீண்டும் அவர்கள் வீடு திரும்பிய போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி தங்கசாமி மயங்கி கிடந்தார்.

உடனடியாக அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கசாமி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரதாஸ் வழக்குப்பதிவு செய்து தங்கசாமி எப்படி இறந்தார்? அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்.