செய்திகள்

கரூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மர்ம மரணம்

கரூர் அருகே கல்லூரி வளாகத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

கரூர்:

கரூர் அருகே  உள்ள மைலம்பட்டியை சேர்ந்தவர் முகமதுபாரூக் (வயது 20). இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டிருந்த  முகமதுபாரூக் திடீரென மயங்கி விழுந்தார். 

இதையடுத்து மற்ற மாணவர்கள் அவரை மீட்டு  சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் முகமதுபாரூக்கை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முகமதுபாரூக்  எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.  உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முகமதுபாரூக்கின் சாவில் மர்மம் உள்ளது என்றும், அது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று  கோரி இன்று காலை கரூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு அவரது  உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews