செய்திகள்

குளித்தலை அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்

குளித்தலை அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

குளித்தலை:

குளித்தலை அடுத்த பாப்பாபட்டி அருகே உள்ள குப்பண்ணாம்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைசில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

இவருக்கும் கடவூர் கரிச்சம்பட்டியை  சேர்ந்த  விவசாயி செல்வராஜ் என்பரவது மகள் சாந்தி (வயது 22) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பாலசுப்பிரமணியன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். இந் நிலையில் பாலசுப்பிரமணியனும் அவரது குடும்பத்தினரும் சாந்தியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. 

இது குறித்து சாந்தி தனது தந்தை செல்வராஜ்சிடம் கூறி உள்ளார். அவர் மகளுக்கு ஆறுதல் கூறி உள்ளார். இந் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு  முன்பு சாந்தி திடீரென மாயமானார். பாலசுப்பிரமணியனும், செல்வராசும் சாந்தியை தேடி வந்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை குப்பண்ணாம்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் சாந்தி பிணமாக மிதந்தார். 

இது குறித்து தகவல் அறிந் ததும் முசிறி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்  விரைந்து சென்று சாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். வரதட்சணை கொடுமையால் சாந்தி  கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரும் கொலை செய்து கிணற்றில் தள்ளி விட்டார்களா?  என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.# tamilnews