இறந்த 24 மணி நேரத்துக்குப்பின் பிரேத பரிசோதனை நடந்தது. அதன் பிறகு உடல் பாகங்கள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் ஸ்ரீதேவி நீரில் மூழ்கி இறந்ததாக அறிக்கை தரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி இயற்கையாகவே நீரில் மூழ்கி இறந்தாரா? எப்படி குளியல் தொட்டியில் மூழ்கினார்? அதில் மர்மம் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஸ்ரீதேவி தங்கி இருந்த ஓட்டலுக்கு போலீசார் சென்று குளியல் அறையை பார்வையிட்டனர். உடைக்கப்பட்ட கதவையும் ஆய்வு செய்தனர். அந்த அறை சீல்வைக்கப்பட்டது. அதன் பிறகு போனிகபூர் மற்றும் ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். போனிகபூரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது. அவரது வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்து கொண்டனர். பின்னர் போனி கபூரின் மைத்துனரும், மண மகனுமான மோகித் மார்வா குடும்பத்தினரும் விசாரிக்கப்பட்டனர். ஸ்ரீதேவி செல்போனையும் கைப்பற்றி அதில் பதிவான எண்களில் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
இதற்கிடையே ஸ்ரீதேவியின் தலையின் பின்புறத்தில் ஆழமான காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அரசு வழக்கறிஞரின் பரிந்துரையின்பேரில் பிரேத அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்வதாகவும் தகவல் வெளியானது. ஸ்ரீதேவியின் உடலை கொண்டு செல்ல இன்னும், அரசு வழக்கறிஞர் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.