பூசாரி கோவிந்தராஜ் - பூசாரி பலியான இடத்தில் தடயங்களை ஆய்வு செய்த காட்சி 
செய்திகள்

பூஜையில் மர்ம பொருள் வெடித்து பூசாரி பலி - போலீசார் விசாரணை

திருவள்ளூர் அருகே பூஜை அறையில் மர்ம பொருள் வெடித்து பூசாரி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த இறையாமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). சாமியாரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. சித்தவைத்தியம், ஜோதிடம், யோகாவும் தெரியும்.

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு ஏக்கர் இடம் வாங்கி தனியாக குடியிருந்தார். வீட்டை சுற்றிலும் மூலிகை செடி வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த இளம்பெண் லாவண்யா என்பவர் கோவிந்தராஜ் வீட்டில் வந்து தங்கினார். நேற்று மாலை வீட்டில் உள்ள பூஜை அறையில் சாமியார் கோவிந்தராஜ் பூஜை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென அங்கிருந்த மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் கோவிந்தராஜ் உடலில் தீப்பிடித்தது. அலறியபடி அவர் வீட்டில் இருந்து வெளியே ஓடினார்.

சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த லாவண்யா வெளியே வந்தபோது கோவிந்தராஜ் உடல் கருகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடலில் பலத்த தீக்காயம் அடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் மப்பேடு போலீசார் விரைந்து வந்து கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மர்ம பொருள் வெடித்தபோது லாவண்யா அருகில் உள்ள அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினார். பூஜை அறையில் வெடித்த பொருள் என்ன? வெடிகுண்டா? என்பது தெரியவில்லை.

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள தடயங்களை துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரினி தலைமையில் தடவியல் நிபுணர் நளினா மற்றும் அதிகாரிகள் சேகரித்தனர்.

அதனை ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். அதன் முடிவு வந்த பின்னரே பூஜை அறையில் வெடித்த பொருள் என்ன? என்பது தெரியவரும்.

மேலும் பூஜை அறையில் ரத்தக்கறை சிதறி கிடக்கிறது. தீப்பற்றும்போது ரத்தக்கறை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கோவிந்தராஜ் உடல் பரிசோதனை முடிவை வைத்து மேலும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக உடன் தங்கி இருந்த பெண்ணிடமும் விசாரணை நடக்கிறது.

பூஜை அறையில் மர்ம பொருள் வெடித்து பூசாரி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.