கோப்புபடம் 
செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே அண்ணன், தம்பி மர்ம மரணம் - போலீசார் விசாரணை

சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே அண்ணன், தம்பி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டனரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

சேலம்:

இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் பட்டாபிராமன். இவருக்கு ஓபுளி (வயது 32), மாதேஷ் (28) என்ற 2 மகன்கள் உள்ளனர். தறித்தொழிலாளர்களான இவர்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தந்தையுடன் சேலத்துக்கு வந்தனர். இதில் மாதேசுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து அவர்கள் 3 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு இரவு நேரத்தில் ஆஸ்பத்திரிக்குள் தங்கினர்.

மேலும் அவர்கள் வேலைக்கு ஏதும் செல்லாமல் ஆஸ்பத்திரி அருகே உள்ள தலைவெட்டி முனியப்பன் கோவில் பகுதியில் அமர்ந்து இருப்பார்கள். யாரேனும் உணவு உள்ளிட்டவை கொடுத்தால் அதை வாங்கி சாப்பிடுவார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 8 மணியளவில் ஓபுளி, மாதேஷ் ஆகிய இருவரும் அந்த கோவில் முன்பு மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்கள் அருகே குளிர்பான பாட்டில் ஒன்றும் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மர்மமான முறையில் 2 பேர் இறந்தது குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் ஈஸ்வரன் மற்றும் செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் இறந்தவர்களின் தந்தை பட்டாபிராமனிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் பட்டாபிராமனிடம் குளிர்பான பாட்டில் கொடுத்துள்ளார். 

இதை வாங்கிய அவர், தான் குடிக்காமல் தனது மகன்களுக்கு கொடுத்ததாகவும், அதனை வாங்கி குடித்த சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் மயங்கி விழுந்து உள்ளதாகவும் தெரிய வந்தது. இதனால் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து அவர்களை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். 

மேலும் அந்த வாலிபர் ஒரு வாரமாக இங்கு வந்து தங்களுக்கு உணவு பொருட்கள் கொடுத்துள்ளதாகவும், ஆனால் அவருடைய பெயர் தெரியாது எனவும் போலீசாரிடம் பட்டாபிராமன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். 

அப்போது மர்ம நபர் ஒருவர் அவர்களுக்கு குளிர்பானம் கொடுப்பது போன்று அதில் பதிவாகியுள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே தந்தை கண் முன்னே மகன்கள் இருவரும் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.