மைசூரு :
உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் நடக்கும் இந்த தசரா விழாவை காண வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மைசூருவுக்கு வருவார்கள். குறிப்பாக 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்து கொண்டு யானைகள் புடைசூழ ஊர்வலமாக வரும் ஜம்பு சவாரி ஊர்வலத்தைக் காண மட்டும் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தசரா விழா நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்த ஆண்டு தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட பல மக்கள் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தசரா விழாவை நடத்துவதற்காக அரசால் அமைக்கப்பட்ட முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான உயர்மட்டக்குழு நாளை(செவ்வாய்க்கிழமை) கூடி பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்து பல முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. இதுதொடர்பாக நேற்று மைசூருவில் மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தசரா விழா நடத்துவதற்காக அரசால் அமைக்கப்பட்ட முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான உயர்மட்டக்குழு வருகிற 8-ந் தேதி(நாளை) ஒன்றுகூடி பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளது. மேலும் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன. தசரா விழாவை ஆடம்பரமாகவோ அல்லது எளிமையாகவோ நடத்துவது பற்றி உயர்மட்டக்குழு முடிவு செய்யும். முதல்-மந்திரி எடியூரப்பா தான் உயர்மட்டக்குழுவின் தலைவர். அதனால் அவர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கொரோனா பரவல் காரணமாக ஆடம்பரமாக தசரா விழாவை நடத்த வாய்ப்புகள் இல்லை. எளிமையாக நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. பெங்களூருவில் திரைப்பட நடிகர்-நடிகைகள், போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி உள்ளனர். இந்த விவகாரத்தில் போலீசாருக்கு, அரசியல்வாதிகளின் அழுத்தம் இருக்கிறதா? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதுபற்றி இன்னும் எந்த தகவலும் வரவில்லை. ஒருவேளை அரசியல்வாதிகளின் தலையீடோ அல்லது அவர்கள் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி இருந்தாலோ அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.