செய்திகள்

முத்துராமலிங்கதேவர் சிலை தங்க கவசம் அறங்காவலரிடம் ஒப்படைக்கப்படுமா?: வங்கி அதிகாரிகள் ஆலோசனை

அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட முத்துராமலிங்க தேவர் சிலைக்கான தங்க கவசம் இந்த ஆண்டு பொருளாளர் பதவி குழப்பத்தால் யாரிடம் வழங்குவது என்பது குறித்து வங்கி நிர்வாகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

மாலை மலர்

மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தேவர் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் நாளை மறுநாள் தேவர் ஜெயந்தி விழா தொடங்குகிறது. இந்த நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் 13.5 கிலோ தங்க கவசத்தை கடந்த 2014-ம் ஆண்டு அணிவித்தார்.

ரூ.4.5 கோடி மதிப்பிலான இந்த தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவின்போது அ.தி.மு.க. சார்பில் முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது. ஜெயந்தி விழா முடிந்ததும் தங்க கவசம் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.

இந்த தங்க கவசத்தை எடுக்கும் பொறுப்பாளராக பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிட அறங்காவலர் மற்றும் அ.தி.மு.க.வின் பொருளாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தங்க கவசத்தை வங்கி பெட்டகத்தில் இருந்து எடுத்து தேவர் நினைவிட நிர்வாகிகளிடம் ஒப்படைத்து வந்தார்.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. பொதுச்செயலாளராக பதவி ஏற்ற சசிகலா ஓ.பன்னீர்செல்வத்தை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தார்.

கட்சியின் வங்கி கணக்குகளை பொருளாளர்தான் நிர்வாகம் செய்வது என்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசன் தனது நியமன விவரத்தை வங்கி நிர்வாகிகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். ஆனால் அப்போது இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பொருளாளர் நான்தான் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வங்கிகளுக்கு கடிதம் அனுப்பினார். மேலும் தன்னை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

தற்போது ஓ.பன்னீர் செல்வமும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் ஒன்றாக இணைந்து விட்டாலும் கட்சியின் அவைத்தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய பதவிகளில் யாரும் நியமிக்கப்படவில்லை. ஒருங்கிணைப்புக்குழு மட் டுமே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேவர் ஜெயந்தி விழாவுக்கு வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 26-ந்தேதி வங்கியில் இருந்து தங்க கவசம் எடுக்கப்படும். ஆனால் இந்த முறை தேவர் ஜெயந்தி விழாக்குழுவினர் வங்கியில் தங்க கவசத்தை பெற நேற்று வந்தபோது வங்கி நிர்வாகம் சில விளக்கங்களை கேட்டு அதற்கு உரிய பதிலை எழுத்து பூர்வமாக தரும்படி கூறியதால் தங்க கவசம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

மேலும் அ.தி.மு.க. பொருளாளர் யார்? என்பதிலும் குழப்பம் நிலவி வருவதால் அ.தி.மு.க. சார்பிலும் விளக்கம் அளிக்க வங்கி நிர்வாகம் கேட்டுள்ளது. மேலும் தேவர் ஜெயந்தி விழாவுக்கு தங்க கவசத்தை உரிய கால அவகாசத்துக்குள் வழங்குவது குறித்து வங்கி அதிகாரிகள் சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

அ.தி.மு.க. உயர்மட்ட நிர்வாகிகளிடம் சில நிபந்தனைகளுடன் எழுத்துபூர்வ உறுதிமொழியை பெற்று தேவர் நினைவிட அறங்காவலரான காந்திமீனாள் வசம் தங்க கவசத்தை ஒப்படைக்கவும் ஆலோசித்து வருகிறார்கள்.

நாளை மாலைக்குள் தங்க கவசம் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டு பசும் பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும் என்று அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் வங்கி நிர்வாகம் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் இந்த முறை தங்க கவசத்தை ஒப்படைக்காமல் அறங்காவலரிடம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தங்க கவசத்தை வழங்கினால் சில சட்ட சிக்கல்கள் ஏற்படும் என்றும் வங்கி அதிகாரிகள் கருதுகிறார்கள்.

எனவே தேவர் நினை விட அறங்காவலர் காந்தி மீனாளிடம் தங்க கவசத்தை ஒப்படைப்பதுடன் ஜெயந்தி விழா முடிந்ததும் தங்க கவசத்தை உரிய பாதுகாப்புடன் திருப்பி ஒப்படைக்க உரிய நடவடிக்கையை வங்கி நிர்வாகம் விரைந்து எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.