கோப்புப்படம் 
செய்திகள்

முத்துராமலிங்கதேவர் தங்க கவசத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது மேலூர் வங்கி

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜைக்காக மதுரை மேலூர் வங்கியில் உள்ள தங்க கவசத்தை மாவட்ட ஆட்சியரிடம் இன்று வங்கி நிர்வாகம் வழங்கியது.

சென்னை:

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. குருபூஜை தவிர மற்ற நாட்களில் இந்த கவசமானது மதுரை மேலுரில் உள்ள ஒரு வங்கியில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த வாரம் குருபூஜை நடைபெற உள்ளதால் தங்க கவசமானது அதிமுக.வில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அந்த கட்சி இரு பிரிவாக உள்ளதால் யாரிடம் வழங்குவது என்ற குழப்பம் வங்கி நிர்வாகிகளுக்கு ஏற்பட்டது.

இரு தரப்பு நிர்வாகிகளும் வங்கிக்கு இன்று வருகை தந்து தங்ககவசத்தை தங்களிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியரிடம் தங்க கவசத்தை வழங்கலாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டி.டி.வி தினகரன் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, தங்க கவசம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது.

வங்கி வளாகத்தில் பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவால் பொருளாளராக நியமிக்கப்பட்ட என்னிடமே தங்ககவசத்தை வழங்கியிருக்க வேண்டும் என பேட்டியளித்தார்.

இரு தரப்பு நிர்வாகிகளும் அதிகளவில் அங்கு கூடியதால், பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதனால், போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT