செய்திகள்

தேங்காய்திட்டில் முத்துமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

புதுவை தேங்காய்திட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

புதுச்சேரி:

தேங்காய்திட்டின் பிரதான சாலையின் நடுவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பாலவிநாயகர், பாலமுருகன், அய்யப்பன், காசிலிங்கநாதன் மற்றும் நவக்கிரகங்களுடன் கூடிய சன்னதியும், ராஜகோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதத்துக்கு முன்பு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஒரு பக்தர் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு உண்டியல் ஒன்றை வழங்கினார்.

அதனை கோவில் நிர்வாகத்தினர் முத்து மாரியம்மன் சன்னதி எதிரே வைத்திருந்தனர். உண்டியலை தரையில் பதிக்காமல் அப்படியே வைத்திருந்தனர். காலையும், மாலையும் பூஜைகள் நடைபெற்று வந்தன.

சமீபத்தில் பங்குனி உத்திர திருவிழாவும் இங்கு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், நேர்த்திக் கடன் செய்தும் காணிக்கை செலுத்தினர். இதனால் உண்டியல் நிறைந்து காணப்பட்டது.

கோவில் நிர்வாகத்தினர் 2 தினங்கள் கழித்து உண்டியலை திறந்து பணத்தை எடுக்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று கோவில் பூசாரி வெற்றி இரவு 9 மணிக்கு கோவில் நடையை சாத்தி விட்டு சென்றார். இன்று காலை 5 மணிக்கு வழக்கம் போல் பூசாரி கோவிலை திறந்தார். அப்போது அங்கிருந்த உண்டியலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலை சுற்றி பார்த்தார். ஆனால், உண்டியல் எங்கும் இல்லை.

இதையடுத்து அவர் கோவில் தலைவர் தாமோதரனுக்கு தகவல் கொடுத்தார். அவரும், ஊர் மக்களும் திரண்டு வந்தனர்.

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்தனர். கோவில் உண்டியல் கோவிலின் பின்புறம் சிறிது தூரத்தில் எறா குட்டையில் கிடப்பதை கண்டுபிடித்தனர். அவர்கள் உண்டியலை கைப்பற்றி கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

கொள்ளையர்கள் கோவிலின் பின்புறம் உள்ள சுவற்றின் அருகே இருந்த மரத்தில் ஏறி உள்ளே வந்துள்ளனர். பின்பு அந்த உண்டியலை கயிறு மூலம் கட்டி வெளியே எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது.

கொள்ளையில் ஈடுபட்ட வர்கள் பல நாட்கள் நோட்ட மிட்டு, உண்டியலை தரையில் பதித்து வைக்காததை தெரிந்து வைத்து கொண்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன், தமிழரசன் ஆகி யோர் வழக்குபதிவு செய்து உண்டியல் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.