செய்திகள்

சிவாஜி பீடத்தில் இருந்த கருணாநிதி பெயரை நீக்கியது கண்டிக்கத்தக்கது: இரா.முத்தரசன்

சிவாஜி பீடத்தில் இருந்த கருணாநிதி பெயரை நீக்கியது கண்டிக்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

திருச்சி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி அரசு மக்களின் ஆதரவை முற்றிலும் இழந்துள்ளது. சொந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்து, பெரும்பான்மை இல்லாத அரசாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் மூலம் தனக்கு எதிரான 18 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்துள்ளார். இதன்மூலம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து விடலாம் என்று நினைக்கிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அரசியலே பேசப்படுகிறது. தமிழகத்தின் உரிமைகள், நலன்களுக்காக இல்லாமல், தங்களது பதவிகளை காப்பாற்றி கொள்ள எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார்.

எனவே இந்த ஆட்சி தொடரக்கூடாது, உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதற்கு போலீசாரிடம் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி மறுத்தால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 30-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு போதிய சுகாதார பணியாளர்கள் இல்லை.

நடிகர் சிவாஜி கணேசன் உலக புகழ்பெற்றவர். அவருக்கு சென்னை நகரில் கருணாநிதி ஆட்சியின் போது பொதுவான இடத்தில் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையை நிறுவியவர் கருணாநிதி. தற்போது அவரது சிலை அமைக்கப்பட்ட கல்வெட்டில் இருந்து அவரது பெயரை நீக்கியது கண்டிக்கத்தக்கது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்திற்கான இடத்தை தேர்வு செய்த வரும் கருணாநிதி தான். சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள கூடாது என யார் உத்தரவு போட்டார்கள் எனத்தெரியவில்லை. யார் உத்தரவை பிறப்பிக்கிறார்கள் என தெரியவில்லை. எல்லாம் மர்மமாக உள்ளது. இதனால் சிவாஜிகணேசன் புகழை மறைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.