முத்தரசன் 
செய்திகள்

ரஜினியின் வருத்தத்துக்கு ‘தர்பார்’ படம் வெற்றி பெறாதது காரணமா?- முத்தரசன் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படம் வெற்றி பெறவில்லை என்பதால் வருத்தப்படுகிறார் என்று கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

மாலை மலர்

மேலூர்:

மதுரை மேலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் மத்திய அரசின் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக பல்வேறு போராட்டம் பேரணி நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு அரசியல் அமைப்பு சட்டம் அனுமதி கொடுக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்த கூடாது என்று அறிவிக்கப்படாத எமர்ஜென்சி தமிழ்நாட்டில் செயல்படுத்துவதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

நாட்டிலும், தமிழகத்திலும் ஜனநாயகம் இல்லை என்ற நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நல்ல தல்ல. எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. தமிழகத்தில் அதுபோல சட்டப்பேரவையிலும் நிறை வேற்றவேண்டும் என தமிழக மக்களும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தும் நிலையில் யாருக்கும் பாதிப்பில்லை என திரும்ப திரும்ப முதல்வர் கூறுகிறார்.

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடுவது போல போராட்டத்தை தடை செய்வது, அச்சுறுத்துவதன் மூலமாக இந்த பிரச்சினையை தடுத்து நிறுத்த முடியாது. குடியுரிமை மசோதாவை திரும்ப பெறவில்லை என்றால் போராட்டம் தொடரும்.

நடிகர் ரஜினி தர்பார் படம் வெற்றி பெற வில்லை என்பதால் வருத்தப்படுகிறார். ரசிகர்களிடம் அரசியலுக்கு வரப்போவதாக கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒருவேளை தர்பார் பட பிரச்சினை காரணமாக வருத்தம் தெரிவித்திருக்கலாம். இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வருவேன் என்றார். ஆனால் எப்போது என தெரியவில்லை.

டெல்லியில் 47 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த இழப்புக்கு இந்துத்துவா அமைப்பே காரணம். ஆனால் அதை திசை திருப்பும் வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கையில் எடுப்பதிருப்பதும் மம்தா சொன்னது போல ஒரு பகுதி உண்மை என தோன்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.