முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது எடுத்த படம். 
செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்து சட்டமன்றத்தில் தனிசட்டம் இயற்ற வேண்டும்- முத்தரசன் பேட்டி

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் திட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்ட மன்றத்தில் தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் பா.ஜனதா அரசு தொடர்ந்து 2-வது முறையாக பதவி ஏற்றுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. இந்த கூட்டத்தை தி.மு.க. , இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

இதேப் போல் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தையும் கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது. இப்படியே போனால் ஒரே நாடு, ஒரே ஆட்சி என்ற நிலைமைக்கு கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது. இந்த திட்டங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

நாகை மாவட்டம் பொரவாச்சேரியில் முகம்மது பைசான் என்ற வாலிபர் மாட்டுக்கறி சாப்பிடும் வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார். இதற்காக முகம்மது பைசனை 20 பேர் கும்பல் தாக்கி உள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வடமாநிலத்தில் நடந்து வருவது போல் தமிழத்திலும் தற்போது இதுமாதிரி கும்பல் தாக்குதல் நடந்துள்ளது வேதனை அளிக்கிறது. இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

ஜூலை 15-ந் தேதி காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. ஆனால் தற்போதைய அ.தி.மு.க. அரசு மத்திய அரசின் உத்தரவின்பேரில் ஜூலை 15-ந் தேதியை மழை நீர் சேகரிப்பு, மாணவர்களின் பங்களிப்பு என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என பள்ளி கல்வி துறை மூலம் கூறி உள்ளது. முன்னர் மாதிரி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கக்கோரி வருகிற 30-ந் தேதி ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக் கோட்டை ஆகிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கடந்த 8 ஆண்டுகளாக குறுவைக்கு குறிப்பிட்ட நாளில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வில்லை. காவிரி மேலாண்மை வாரியம் இருந்தும் பயனில்லை. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்று தர வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள். ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் திட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்ட மன்றத்தில் தனி சட்டம் இயற்ற வேண்டும்.

மத்திய அரசின் பட்ஜெட்டால் பெட்ரோல்- டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை கண்டித்து நாளை மறுநாள் (16-ந் தேதி) தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.