செய்திகள்

முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிராக மகாராஷ்டிராவில் முஸ்லிம் பெண்கள் பேரணி

மத்திய அரசின் முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாரஷ்டிரா மாநிலம், புனே நகரில் இன்று முஸ்லிம் பெண்கள் பேரணி நடத்தினர். #TripleTalaqBill #Maharashtra #MuslimWomenRally

மாலை மலர்

மும்பை:

ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் 28-12-2017 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

அங்கு சிறிய விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் கிடைக்காததால் மாநிலங்களவையில் முடங்கியுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில்  அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் கடந்த மாதம் பேரணி நடைபெற்றது.

இந்நிலையில், முஸ்லிம் தனிசட்டத்தில் அரசின் தலையீடு கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இன்று முஸ்லிம் பெண்கள் பேரணி நடத்தினர். மத்திய அரசின் முடிவுக்கு எதிரான பதாகைகளுடன் இந்த பேரணியில் பெண்கள் கலந்துகொண்டனர்.  #TripleTalaqBill #Maharashtra #MuslimWomenRally #tamilnews