கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் இருவரும் சொதப்பினார்கள். ஆனால் 2-வது இன்னிங்சில் இருவரும் அரைசதம் அடித்தனர்.
தவான் - லோகேஷ் ராகுல்
நாக்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தவான் சொந்த வேலைக்காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக முரளி விஜய் இடம்பிடித்தார். முரளி விஜய் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.
முரளி விஜய் - தவான்
கடந்த சில மாதங்களுக்கு முன் முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வந்தார்கள். முரளி விஜய்க்கு காயம் ஏற்பட்டதால் இலங்கை தொடரில் தவான் இடம்பிடித்தார். அப்போது சிறப்பாக விளையாடி தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
தற்போது மூன்று பேரும் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். மேலும், இலங்கை தொடர் முடிந்தவுடன் இந்தியா தென்ஆப்பிரிக்கா செல்ல இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா தொடருக்கு இந்த மூன்று பேரும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். இதனால் மூன்று பேரும் டெல்லி டெஸ்டை முன்னோட்டமாக கருதுவார்கள்.
லோகுஷ் ராகுல் - முரளி விஜய்
இதனால் மூன்றுபேருக்கும் டெல்லி டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. என்றாலும் இரண்டு பேரைத்தான் தேர்வு செய்ய முடியும். அந்த இரண்டு பேர் யார் என்பதை தேர்வு செய்வதில் கேப்டன் விராட் கோலிக்கு பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது.