செய்திகள்

டெல்லி ரோகினி ஆசிரமத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்

டெல்லி ரோகினியில் உள்ள பாபா விரேந்திர தேவ் தீக்சித்தின் ஆசிரமத்தை அகற்றும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் பாபா விரேந்தர் தீக்சித்துக்கு சொந்தமான 'அத்யாத்மிக் விஷ்வா வித்யாலயா' இயங்கி வருகிறது. இங்கு சிறுமிகள் மற்றும் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லி பெண்கள் ஆணையம் மற்றும் குழந்தைகள் நலக் குழுவானது போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.  

இச்சோதனையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த ஆசிரமத்தில் பல சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 41 சிறுமிகளை போலீசார் மீட்டனர்.

இதையடுத்து ஆசிரமத்தில் பெண்கள், சிறுமிகள் சித்ரவதை செய்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. தீக்சித் மீது இரண்டு வழக்குகள் மற்றும் ஆசிரமத்தில் அதிகாரிகள் சோதனை செய்தபோது தகராறில் ஈடுபட்ட நபர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரி தலைமையில் மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரோகினியில் உள்ள பாபா விரேந்திர தேவ் தீக்சித்தின் ஆசிரமத்தை இடிக்கும் பணியில் டெல்லி மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.