செய்திகள்

சவுகார் ஜானகியின் தங்கை நடிகை கிருஷ்ண குமாரி காலமானார்

சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார் உள்ளிட்டவர்களுடன் திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகை கிருஷ்ண குமாரி(84) இன்று பெங்களூருவில் காலமானார். #KrishnaKumari #SowcarJanaki

சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார் உள்ளிட்டவர்களுடன் திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகை கிருஷ்ண குமாரி(84) இன்று பெங்களூருவில் காலமானார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர் கிருஷ்ணகுமாரி. நடிகர் சவுகார் ஜானகியின் தங்கையான இவர் 1951-ம் ஆண்டு நவிதே நவரத்னலு என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடத்திலும், திரும்பிப்பார், மனிதன், கற்கோட்டை, புதுயுகம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். பிற மொழிகளில் சுமார் 200 படங்களில் இவர் நடித்துள்ளார்.

1960-70-களில் பிரபல நாயகியாக திகழ்ந்த கிருஷ்ண குமாரி, அன்றைய பிரபல நடிகைகளில் மிகவும் அழகிய நாயகியாக பேசப்பட்டார். அந்நாள் கதாநாயகர்களான என்டி.ராமாராவ், அக்கினினேனி நாகேஸ்வரராவ், கிருஷ்ணம் ராஜூ, ராஜ்குமார், சிவாஜி கணேசன் உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.

சிறந்த நடிகைக்கான ஜனாதிபதி விருதினை பெற்ற கிருஷ்ண குமாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் அஜய் மோகன் கைத்தான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கன்னட திரையுலகில் சுமார் 30 ஆண்டுகள் பிரபல நடிகயாக வலம்வந்த இவர் பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டு பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.