உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் நேற்று திடீரென பனிப்பாறை உடைந்து விழுந்தது. இதனால் தவுலி கங்கா, ரிஷி கங்கா மற்றும் அலக்நந்தா நதிகளில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் உத்தரகாண்ட் மாநிலத்தில் பேரழிவு ஏற்பட்டது.
வெள்ளத்தால் என்டிபிசியின் தபோவன்- விஷ்ணுகாட் நீர்மின் திட்டம், ரிஷி கங்கா நீர்மின்திட்டம் ஆகியவை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. இந்த இரண்டு இடங்களில் உள்ள சுரங்கத்தில் வேலைப்பார்த்த பணியாளர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
நேற்று ரிஷிகங்கா நீர்மின் நிலையத்தில் உள்ள சுரங்கத்தில் உள்ள பணியாளர்களை இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படை மீட்டது. தபோவன்-விஷ்ணுகாட் நீர்மின் நிலையம் உள்ள சுரங்கத்தில் 34 பேர் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.
அவர்களை மீட்கும் பணியில் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படை, தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாநில பேரிடர் மீட்புக்குழு ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் சுரங்கத்தில் இருந்து மணல், சேறுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஊழியர்கள் சிக்கியுள்ள இடம் அருகே சென்றதாக கூறப்படுகிறது.
சுமார் 100 மீட்டர் அளவிற்கு சேறுகளை சுரங்கங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இன்னும் 100 மீட்டர் தூரம் வரை அகற்ற வேண்டியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் இந்த வேலை முடிவுடையும் என இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.