செய்திகள்

காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் சமாஜ்வாடி கட்சி தோற்றது: முலாயம் சிங் சொல்கிறார்

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் சமாஜ்வாடி கட்சி தோல்வி அடைந்ததாக முலாயம் சிங் கூறினார்.

மாலை மலர்

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் சமாஜ்வாடி கட்சி தோல்வி அடைந்ததாக முலாயம் சிங் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரியாக இருந்த அகிலேஷ் யாதவுக்கும், சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அவரது தந்தை முலாயம் சிங்குக்குக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு பின்னர் மோதலாக வெடித்தது. இதைத்தொடர்ந்து, அகிலேஷ் யாதவ் கட்சியின் தலைமை பதவியை கைப்பற்றி, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் சமாஜ்வாடி 47 தொகுதிகளை மட்டுமே (மொத்த தொகுதிகள் 403) கைப்பற்றி பெரும் தோல்வியை சந்தித்தது.

அகிலேஷ் யாதவ் தனது பேச்சை கேட்காமல் நடந்து கொண்டு, தன்னை அவமதித்ததால்தான் தேர்தலில் சமாஜ்வாடி படுதோல்வியை சந்திக்க நேரிட்டதாக முலாயம் சிங் ஏற்கனவே கூறி இருந்தார்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கர்ஹால் பகுதியில் உள்ள ஜூனேசா கிராமத்தில் நேற்று நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட முலாயம் சிங், பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கூட்டணி வைக்கக்கூடாது என்று அகிலேஷ் யாதவுக்கு நான் ஆலோசனை வழங்கினேன். ஆனால் அவர் அதை கேட்காமல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தோற்றதற்கு காங்கிரசுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம்.

காங்கிரஸ் எனக்கு எதிராக வழக்குகள் போட்டு இடையூறு செய்தது. ஆனால் அகிலேஷ் யாதவ் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டார். உத்தரபிரதேச மக்கள் சமாஜ்வாடியை தோற்கடிக்கவில்லை. தனது தோல்விக்கு சமாஜ்வாடி கட்சியே பொறுப்பாகிவிட்டது.

பாராளுமன்ற தேர்தலின் போது, பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்று நரேந்திர மோடி மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் ரூ.15 ஆயிரம் கூட கொடுக்கவில்லை. அவர் மக்களை ஏமாற்றிவிட்டார்.

இவ்வாறு முலாயம் சிங் கூறினார்.