குடிநீர் கேட்டு மூலனூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டவர்களை படத்தில் காணலாம். 
செய்திகள்

மூலனூரில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

மூலனூரில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

மூலனூர்:

திருப்பூர் மாவட்டம் மூலனூர், தாராபுரம், குண்டடம் பகுதிகளுக்கு சுழற்சி முறையில் காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மூலனூர், தாராபுரம், குண்டடம் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி நீரேற்று நிலையத்தில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மூலனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நேற்று காலை மூலனூர் பேரூராட்சி அலுவலகத்தை சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

மூன்று சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மாத காலமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை அலுவலகத்தில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் மூலனூர் பகுதிக்கு உடனடியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் முறையாக குடிநீர் வழங்கப்பட வேண்டும் என கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம், அதிகாரிகளிடம் பேசி இரண்டு நாட்களில் மூலனூர் பகுதிக்கு முறையாக காவிரி கூட்டு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மூலனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT