செய்திகள்

முதுகுளத்தூர் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பால் அரசு அலுவலகங்களை சூழ்ந்த தண்ணீர்

முதுகுளத்தூர் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பால் அரசு அலுவலகங்களை மழைநீர் சூழ்ந்தது.

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர், அபிராமம் பகுதியில் சில நாள்களுக்கு முன் பெய்த கனமழையால் நல்லூர் காலனி பகுதியில் பயிரிடப்பட்ட மிளகாய் விவசாயத்தை மழைநீர் சூழ்ந்தது. மிளகாய் விவசாயத்தை காக்க விவசாயிகள் நிலங்களிலுள்ள மழைநீரை அப்புறப்படுத்தினர்.

அந்த மழைநீர் கீரனூர் பகுதியிலுள்ள விவசாய நிலங்கள், இ-சேவை மையம், கால்நடை துணை மருத்துவமனை, ஊராட்சி அலுவலகங்களை சூழ்ந்ததுடன், நெல் பயிர்களையும் மூழ்கடித்தது.

இதனால் நெல் விவசாயத்தை காக்க விவசாயிகள் வாளிகள் கொண்டு மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு அலுவலகங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால், இ சேவை மையம், ஊராட்சி அலுவலகங்களில் பணிகளை மேற்கொள் வதிலும், கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வரத்து கால்வாய், பொது பாதை ஆக்கிரமிப்புகளால் கீரனூர் ஊரணியில் மழைநீர் நிரம்பி கிராமத்திற்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பிலுள்ள வரத்து கால்வாய், பொது பாதைகளை அகற்றி, விவசாயம், அரசு அலுவலகங்களை சூழ்ந்த மழைநீரை அப்புறப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.