முசிறி:
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள தின்னகோணம் கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை வேளாண் விவசாயி யோகநாதன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டி உள்ளார். அப்போது பானை ஒன்று தென்பட்டதால் அதனை தொழிலாளர்கள் உதவியுடன் பாதுகாப்பான முறையில் நீண்டநேர போராட்டத்திற்கு பின் உடையாமல் முழுமையாக மீட்டெடுத்தார். அப்போது அது முதுமக்கள் தாழி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளர் பாபு கூறும்போது, மிகவும் பழமையான இந்த முதுமக்கள் தாழி தின்னகோணம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை தருகிறது. இதுபோன்ற வரலாற்று தன்மையுடைய அடையாளங்கள் இப்பகுதியில் தென்படுவதால் இந்தபகுதியை தொல்லியல் துறை ஆய்வாளர்களை கொண்டு ஆய்வு செய்தால் பழமையான விஷயங்கள் கண்டுபிடிக்கப்படும். இந்த முதுமக்கள் தாழியை முசிறி சப்-கலெக்டர் மூலம் அரசிடம் ஒப்படைத்து, அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்க வேண்டும். இந்த முதுமக்கள் தாழியின் தொன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.