ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் மேலக்கொடுமலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 58), விவசாயி. இவரது விவசாய நிலத்தில் பண்ணை குட்டைகள் தோண்டப்பட்டது. அப்போது பூமிக்கடியில் நூற்றாண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் 3 கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து விவசாய நிலத்தில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை நிறுத்தி கமுதி வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அங்கு பழமையான ஓடுகள், வளையங்கள், இரும்பு தாதுகள் போன்றவையும் கிடைத்தன. அதனை தொடர்ந்து அப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுமக்கள் தாழிகளுடன் பழமையான பொருட்கள் கிடைத்துள்ளதை பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.