செய்திகள்

முதலியார்பேட்டையில் மனைவி பிரிந்து சென்றதால் கட்டிட தொழிலாளி தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டை உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 48). கட்டிட தொழிலாளி. இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.

மது குடிக்கும் பழக்கம் உள்ள மாரிமுத்து அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வந்ததால் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து கிருஷ்ணவேணி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதையடுத்து மாரிமுத்து பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் வேதனையில் மாரிமுத்து அளவுக்கு அதிகமாக மது குடிக்க தொடங்கினார். இதனால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த மாரிமுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் பெற்றோர் தூங்கிவிட்ட பின்னர் வீட்டின் எதிரே உள்ள வேப்ப மரத்தில் வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.