செய்திகள்

ஆன்லைனில் பணம் செலுத்தினாலும் குடிநீர் கிடைக்க 15 நாள் ஆகிறது: மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னையில் லட்சக்கணக்கானோர் குடிநீர் கேட்டு ஆன்லைனில் பணம் செலுத்தினாலும் 15 நாட்கள் காத்திருப்பதாக மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டி உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் போதிய குடிநீர் வழங்குவது குறித்து சட்ட சபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் (தி.மு.க) பேசியதாவது:-

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சி, 12,524 ஊராட்சிகள் உள்ளன. இந்த அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை இருந்தாலும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் அறிக்கையாக அமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாதாள சாக்கடை செயல்படுத்தப்படும் பகுதிகளில் நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவதாகவும், பாதாள சாக்கடை செயல்படுத்தப்படாத பகுதிகளில் ஒரு நபருக்கு 90 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவதாகவும் பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 70 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை குடிநீர் ஆதாரமாக உள்ள 4 ஏரிகளும் வறண்டுள்ளது. இப்போது கடல் குடிநீர் உள்பட பல்வேறு வழிகளில் குடிநீர் கொண்டு வரப்பட்டு சென்னைக்கு 40 கோடி லிட்டர் கொடுக்கப்படுகிறது. ஆனால் 83 கோடி லிட்டர் தண்ணீர் நமக்கு தேவையாகும்.

ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி குடிநீர் பெறலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் சென்னையில் லட்சக்கணக்கானோர் குடிநீர் கேட்டு ஆன்லைனில் பணம் செலுத்தினாலும் 15 நாட்களாக குடிநீருக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.

சைதாப்பேட்டையை பொறுத்தவரை குடிநீர் தொட்டிகள் 300 தேவை என்பதை வலியுறுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை எடுத்துரைத்தார். இதற்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 62 சதவீதம் மழை குறைவாக பெய்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியையும், குடிநீர் வழங்குவதையும் சமாளிக்க பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் போர்க்கால அடிப்படையில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பல்வேறு புள்ளி விவரங்களை எடுத்துக்காட்டி விரிவாக பதில் அளித்தார்.