செய்திகள்

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் குறித்து ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று இரவு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு தொடர்பான சில முடிவுகள் கையெழுத்திடப்பட்டன. தொ.மு.ச. உள்பட சில தொழிற்சங்கங்கள் அந்த ஊதிய உயர்வை எதிர்த்து, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டதன் பேரில், பல தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று (நேற்று) சுமார் 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன.

அரசு வழங்குவதாக சொன்ன ஊதிய உயர்வு குறித்து தெளிவாக தெரிந்தால், அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்புவார்கள். பஸ் ஊழியர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு நிச்சயம் ஊழியர்களுக்கு கிடைக்கும். எனவே இதனை ஏற்றுக்கொண்டு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். கடந்த ஆண்டு போராட்டத்தின்போது ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை ரூ.1,500 கோடியை வழங்கவேண்டும் என்பது தொடர்பாகவே எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தற்போது ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 11-ந் தேதி ரூ.205 கோடியும், அடுத்த தவணையாக ரூ.380 கோடியும் வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான நிலுவைத்தொகை படிப்படியாக வழங்கப்படும்.

இந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் 2.44 மடங்கு கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் 2.57 மடங்கு கேட்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் ஊதிய ஒப்பந்தம் போடப்படும். ஆனால் போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் நடக்கிறது.

2013-ம் ஆண்டு மற்றும் தற்போது உயர்த்தப்பட்ட ஊதியத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வருகிறது. சி.ஐ.டி.யூ. தலைவர் சவுந்தரராஜன் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.1,500 கோடி நிலுவையில் இருந்தது. 15 ஆண்டு கால பிரச்சினையை ஒரு நேரத்தில் முடிவு செய்யவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால் எப்படி?

தற்போது ஊழியர்களிடையே போராட்டம் திணிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையின்போதே ரூ.1,000 முதல் ரூ.1,500 கோடி வரை வருமானத்தை உயர்த்த ஏற்பாடு செய்யப்படுகிறது, எனவே அதனை வைத்து இந்த பிரச்சினையை சரிக்கட்டிவிடலாம் என்று கூறினேன்.

நிலுவைத்தொகை ரூ.5 ஆயிரம் கோடியும் உடனடியாக வழங்க முடியாத தொகை. ஊழியர்கள் ஓய்வுபெறும்போது அதை வழங்கமுடியும். ஓய்வுபெற்றவர்களுக்கு ரூ.922 கோடியும், பணியில் உள்ளவர்களுக்கு ரூ.1,500 கோடியும் நிலுவைத்தொகையாக இருந்தது. அதுதான் நிர்வாக செலவுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்று அது ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் ரூ.380 கோடி ஒரு தவணை பாக்கி இருக்கிறது.

இதையெல்லாம் மறந்துவிட்டு, ஐகோர்ட்டு உத்தரவையும் மதிக்காமல் 2.57 மடங்கு தான் வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடருகிறார்கள். அப்படி இருந்தும் 80 சதவீத பஸ்கள் தற்போது ஓடுகிறது. கரூர் மாவட்டத்தில் 100 சதவீத பஸ்களும் ஓடுகிறது. பயிற்சி இல்லாத டிரைவர்கள் நியமனம் என்பதெல்லாம் உண்மை இல்லை.

பொதுமக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக பள்ளி வாகனம் ஓட்டியவர்கள், ஓய்வுபெற்றவர்கள் என முறையான உரிமம் வைத்திருப்போரும், பயிற்சி பெற்றவர்களும் தான் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

பணிக்கு வராத ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டு விசாரணையின் முடிவில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும். கொஞ்சம் சிரமம் இருக்கிறது. இதை பொதுமக்கள் தயவுசெய்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் விடாப்பிடியாக பிடிவாதம் பிடித்து வருகிறார்கள். ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews