செய்திகள்

மார்ச்சுவரியின் உள்ளே பசுவின் சடலம்.... வெட்டவெளியில் நடந்த பிரேதப்பரிசோதனை

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் மார்ச்சுவரியின் உள்ளே இறந்து கிடந்த பசு மாடு அகற்றப்படாததால், 14 வயது சிறுமியின் பிரேதப்பரிசோதனை வெட்ட வெளியில் பெற்றோர் கண்முன்னே நடந்துள்ளது.

போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் மார்ச்சுவரியின் உள்ளே இறந்து கிடந்த பசு மாடு அகற்றப்படாததால், 14 வயது சிறுமியின் பிரேதப்பரிசோதனை வெட்ட வெளியில் பெற்றோர் கண்முன்னே நடந்துள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் நார்ஷிங்பூர் மாவட்டத்தில் உள்ள கடார்வரா என்ற இடத்தில் 100 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரியில் கடந்த வாரம் ஒரு பசு மாடு சென்று உள்ளேயே இறந்து விட்டது. இதனை அகற்றக்கோரி மருத்துவமனை சார்பில் உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பசுவின் சடலத்தை அப்புறப்படுத்தவில்லை.

இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று மின் விபத்து ஏற்பட்டு இறந்த 14 வயது சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர். மார்சுவரியின் உள்ளே பசுவின் சடலம் இருந்ததால், துர்நாற்றம் அதிகமாக வீசியுள்ளது. இதனால், சிறுமியின் உடலை அறைக்கு வெளியே பெற்றோர் கண்முன்னே பாந்தி என்ற மருத்துவர் போஸ்ட்மார்ட்டம் செய்துள்ளார்.

தங்கள் கண்முன்னே மகளின் பிரேதத்தை மருத்துவர் வெட்டி பரிசோதனை செய்வதைப் பார்த்து கொதித்து போன சிறுமியின் பெற்றோர்கள், மருத்துவர் பாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகாரளித்தனர். இதையடுத்து, திடீரென பாந்த் மாவட்ட மருத்துவமனைக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாவட்ட மருத்துவ அதிகாரி, “பாந்த் அப்படி செய்ததில் தவறு இல்லை. எனினும், இது போல மறுமுறை நடக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளோம். மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாகவே அவர் மாவட்ட மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் உரிய அனுமதி பெற்றுவிட்டுதான் சிறுமியின் போஸ்ட்மார்ட்டம் வெளியே நடத்தப்பட்டது என மருத்துவர் பாந்த் கூலாக பதில் கூறியுள்ளார்.