செய்திகள்

கீழக்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது: 3 வாலிபர்கள் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நண்பர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள வண்ணாங்குண்டுவை சேர்ந்தவர் முகமது கனி. இவரது மகன் முகமது பைசல் (வயது 35).

இவர், தனது நண்பர்கள் சைபுல்லாகான்(37) மற்றும் முனியசாமி (35) ஆகியோருடன் ஓரே மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்று விட்டு, நள்ளிரவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கீழக்கரை-ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் சென்றபோது, எதிரே கண்டெய்னர் லாரி வந்தது. தூத்துக்குடியில் இருந்து அறந்தாங்கி சென்ற அந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப் பட்டனர். அதிகாலை 1.30 மணியளவில் விபத்து நடந்ததால் உடனடியாக யாருக்கும் தெரியவில்லை.

இதனால் சாலையில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகி விட்டனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கீழக்கரை போலீசார் சம்பவ இடம் சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்நது விசாரணை நடத்திய போலீசார், விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் ஜேசுதாசை கைது செய்தனர். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஆவார்.