விபத்து 
செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கணவன்-மனைவி பலி

நாட்டறம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்காலபுரம் பூசாரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 63), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி ரஞ்சிதா (53). இவர்கள் இருவரும் பூசாரியூர் கிராமத்தில் இருந்து வாணியம்பாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளியை அடுத்த கல்லாறு பகுதியில் சாலையை கடக்கும் போது சென்னையில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரஞ்சிதாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் லாரன்ஸ் (53) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT