கோவை:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரன்குளத்தை சேர்ந்தவர் முஸ்தபா. இவரது மகன் பாசில் (வயது 20) பி.காம் இறுதியாண்டு படித்து வந்தார். இவரது நண்பர் ஷான்பாபு (23). பி.பி.ஏ. படித்து வந்தார்.
நண்பர்கள் 2 பேரும் கோவை சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் சங்கரன்குளத்திற்கு நேற்று மாலை புறப்பட்டனர்.
சொர்ணூர் ஆரணி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்றபோது திருச்சூரில் இருந்து ஒரு கார் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் பாசிலும் அவரது நண்பர் ஷான்பாபுவும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த பாசில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஷான்பாபு ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது காருக்குள் முள்ளங்கோடு பகுதியை சேர்ந்த டாக்டர் கைரளியும் அவரது மகள் டாக்டர் கவிதாவும் படுகாயம் அடைந்து காருக்குள் மயங்கி கிடந்தனர்.
காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு வாணியங்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவர் ஷான்பாபு சிகிச்சை பலனின்றி இறந்தார். பலியான மாணர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சொர்ணூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.