செய்திகள்

புதுவை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்: லேப்-டெக்னீசியன் பலி

புதுவை அருகே இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் லேப்-டெக்னீசியன் பலியானார்.

சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான வானூர் அருகே விநாயகபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் சோமசுந்தரம் (வயது 36). இவர், பயோ டெக்னாலஜி படித்து முடித்து கோட்டக்குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் லேப்- டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.

திருமணம் ஆகாத இவர் சமீப காலமாக லேப்-டெக்னீசியன் வேலைக்கு செல்லாமல் விவசாயத்தில் ஆர்வம் கொண்டு வேளாண் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.

இன்று அதிகாலை இவர் கோட்டக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார்.

ஆரோவில் போலீஸ் நிலையம் அருகே மகா வீரபுரம் என்ற இடத்தில் வந்த போது முன்னால் வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டரை சோமசுந்தரம் முந்தி செல்ல முயன்றார்.

அப்போது எதிரே புதுவையில் இருந்து சேதராப்பட்டு நோக்கி வந்த புதுவை அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பஸ்சின் முன் சக்கரம் சோமசுந்தரம் உடல் மீது ஏறி இறங்கியது.

இதில் சோமசுந்தரம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார். இதனை பார்த்ததும் பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார், சப்-இன்ஸ் பெக்டர் ஜான்ஜோசப் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் தனியார் ஆம்புலன்சை வரவழைத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள். #tamilnews

SCROLL FOR NEXT