தக்கலை:
ராஜாக்கமங்கலம் எள்ளு விளையைச் சேர்ந்தவர் தவசிலிங்கம். இவரது மகள் நித்யா, (வயது 24), பட்டதாரி. இவர் அளத்தங்கரையில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். தினமும் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். நேற்று நித்யா வேலைக்கு சென்று விட்டு மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
எள்ளுவிளை சந்திப்பில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் நித்யாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
நித்யாவுக்கு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு செல்லப்பட்ட நித்யா பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக் காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.