ராஜபாளையம்:
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டு தெற்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
வடகரை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் சென்றபோது திடீரென ஒரு நாய் குறுக்கே சென்றது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார். இதில் மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.
கீழே விழுந்த முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உடல்நிலை மோசமானதால் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.