விபத்து 
செய்திகள்

மோட்டார் சைக்கிள் தடுப்பு கட்டையில் மோதியதில் பட்டதாரி வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் தடுப்பு கட்டையில் மோதி பின்னர் எதிரே வந்த மினி லாரியில் மோதியதில் பட்டதாரி வாலிபர் பலியானர்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை வெங்கட்டா நகரை சேர்ந்தவர் நூர்முகமது (வயது24). எம்.டெக் பட்டதாரியான இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல ஏற்பாடு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு நூர் முகமது தனது நண்பர் அருண் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

ரெட்டியார்பாளையத்தில் ஒரு தனியார் ஓட்டல் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பு கட்டையில் மோதி பின்னர் எதிரே வந்த மினிலாரியில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நூர்முகமது, அவரது நண்பர் அருண் ஆகியோர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நூர்முகமது பரிதாபமாக இறந்து போனார். அருண் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.