விபத்து 
செய்திகள்

முக்கூடல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி

முக்கூடல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

முக்கூடல்:

சேரன்மகாதேவியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களது மகள் சுருத்திகா (வயது 2).  முத்துராமலிங்கம் சுருத்திகாவை தீபாவளி பண்டிகைக்காக ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் அவரது உறவினர் வீட்டில் விட்டு விட்டு, மீண்டும் சுருத்திகாவை சேரன்மகாதேவிக்கு அழைத்து வர மாறாந்தைக்கு தம்பதியினர் சென்றுள்ளனர். 

சம்பவத்தன்று கணவன்- மனைவி, சுருத்திகா ஆகியோர் மாறாந்தையிலிருந்து புறப்பட்டு கலியன்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெபஸ்டியான், மகன் கிறிஸ்டோபர் (22) இவர் ஓடை மறிச்சான் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். 

இந்நிலையில் இவர்கள் இருவரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழந்த முத்துராமலிங்கம் தம்பதியினரின் மகள் சுருத்திகா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முத்துராமலிங்கம், அவர் மனைவி முருகேஸ்வரி மற்றும் விபத்துக்குள்ளாக்கிய கிறிஸ்டோபர் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த முக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், கணேசன், சிவதாணு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தை சுருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த கிறிஸ்டோபரை மேல்சிகிச்சைக்காகவும் நெல்லை அரசு மருத்துவ மனைக்கும், இலேசான காயமடைந்த முத்துராமலிங்கம் தம்பதியினரை முக்கூடல் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் இது குறித்து அறிந்த முத்துராமலிங்கத்தின் உறவினர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு சென்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.