விபத்து 
செய்திகள்

போச்சம்பள்ளி அருகே புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி

புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள மத்தூர் குல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது35). கூலிதொழிலாளியான இவர் நேற்றிரவு 10 மணி அளவில் போச்சம்பள்ளியில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருவயலூர் என்ற இடத்தில் வந்த போது குறுகிய சாலை என்பதால் மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மீது எதிர் பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

விபத்தில் படுகாயம் அடைந்த கோவிந்தனை மீட்டு சிகிச்சைக்காக  போலீசார் போச்சம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதி குறுகிய சாலை என்பதால் அடிக்கடி அந்த இடத்தில் விபத்துக்கள் நடக்கிறது. அதனை அதிகாரிகள் சுதாரித்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.