வால்பாறை:
வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் 6-வது பிரிவு பத்தாம்பாத்தி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார் (20), ராஜேஷ்(19). இவர்கள் இருவரும் வால்பாறை அரசு கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் வால்பாறைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் பத்தாம்பாத்தி எஸ்டேட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ராஜேஷ் ஓட்டி சென்றார். ராஜேஷ்குமார் பின்னால் அமர்ந்து இருந்தார்.மோட்டார் சைக்கிள் வால்பாறை குமரன்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நடந்து சென்ற வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பாத்திமாபீவீ(76) மீது மோதி விபத்துக்குள்ளாகி சாலையில் விழுந்தனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ராஜேஷ் குமாரின் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜேஷ், மூதாட்டி பாத்திமாபீவிக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் பலியான ராஜேஷ்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.