செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி

ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாப உயிரிழந்தார்.

மாலை மலர்

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்லிமித்திகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் விவேக் ( வயது 22). இவர் கும்மிடிபூண்டி சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிச்சய தார்த்தம் நடைபெற்றது. வருகிற 26-ந்தேதி ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர்களது திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் விவேக், சத்தியவேடு பகுதியில் உள்ள நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

சத்தியவேடு நகர எல்லையில் சென்று கொண்டிருந்த போது எதிரே பொன்னேரியிலிருந்து சத்தியவேடு நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த விவேக்கை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சத்தியவேடு சப் இன்ஸ்பெக்டர் மல்லேஸ் யாதவ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரு வாரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் விவேக் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.