செய்திகள்

தாராபுரத்தில் மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலி

தாராபுரத்தில் சாலையில் வெட்டிப்போட்ட மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலி மனைவி கதறல்

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வீராச்சிமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 22). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி செண்பகம் (19). கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

சம்பவத்தன்று இரவு நாகராஜ் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் சீராம்பாளையத்தில் வந்தபோது சாலையில் இருந்த சிறிய கல் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.

இதனால் நிலைதடுமாறியது. மோட்டார் சைக்கிளை நாகராஜ் திருப்பியபோது அங்கு ஏற்கனவே வெட்டிப்போட்டிருந்த மரத்தின்மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். நாகராஜின் உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார்.

இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.