செய்திகள்

மேலகிருஷ்ணன் புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 10-ம் வகுப்பு மாணவர் பலி

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

என்.ஜி.ஓ. காலனி:

மேலகிருஷ்ணன் புதூரை அடுத்த கடற்கரை கிராமமான பள்ளம் அன்னை நகரை சேர்ந்தவர் பால்மோகன். மீன்பிடி தொழிலாளி. பால்மோகனின் மனைவி அனிதா. இவர்களுக்கு பெர்டினாந்து பவுல் (வயது 15) என்ற மகனும், பெரோனாதமி (13) என்ற மகளும் உள்ளனர். பெர்டினாந்து பவுல் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். பெரோனாதமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் இருவரும் வீட்டில் இருந்தனர்.

பால்மோகனின் உறவினர் இல்லத்திருமணம் இன்று நடக்க இருந்தது. இதனால் உறவினர்கள் அனைவரும் திருமண வீட்டிற்கு செல்ல தயராகி கொண்டிருந்தனர். அப்போது காலை உணவிற்கு பழம் வாங்க அருகில் உள்ள கடைக்கு பெர்டினாந்து பவுல் சென்றார்.

மோட்டார் சைக்கிளில் சென்றதால் அவருடன் தங்கை பெரோனாதமியும் உடன் சென்றார். இருவரும் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள கடைக்கு சென்றனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து பள்ளத்திற்கு வரும் அரசு பஸ் அந்த வழியாக வந்தது. எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெர்டினாந்து பவுலும், அவரது தங்கை பெரோனாதமியும் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் பெர்டினாந்து பவுல், பெரோனாதமி இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பெர்டினாந்து பவுலுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பெர்டினாந்து பவுல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையே விபத்து பற்றி தெரியவந்ததும், பெர்டினாந்து பவுல், பெரோனாதமி ஆகியோரின் பெற்றோரும், உறவினர்களும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் பார்த்து கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.

தகவல் அறிந்து சுசீந்திரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடமும் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.