கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த பட்டுபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 37). ஆரணி அடுத்த கொசவம்பேட்டை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
நேற்று பிற்பகல் கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் தேவேந்திரன் சென்று கொண்டிருந்தார். முன்னதாக மோட்டார் சைக்கிள் டேங்கில் ரூ.300-க்கு பெட்ரோல் போட்டு விட்டு சென்றார்.
கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து இறங்கி சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது அதன் என்ஜீன் பகுதியில் ஆயில் கசிந்து திடீரென மோட்டார் சைக்கிள் தீ பற்றியது.
தேவேந்திரன், மோட்டார் சைக்கிளை தரையில் போட்டுவிட்டு குதித்து தப்பினார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மோட்டார் சைக்கிளும் முழுமையாக எரிந்து சாம்பலானது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.