செய்திகள்

அரியாங்குப்பத்தில் காய்கறி வியாபாரி மோட்டார் சைக்கிள் மோதி பலி

அரியாங்குப்பத்தில் காய்கறி வியாபாரி மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலியான சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

பாகூர்:

தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் என்.ஆர். நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது81). இவர் தள்ளுவண்டி மூலம் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் ரோட்டில் தள்ளுவண்டியை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது காளியப்பன் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட காளியப்பன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் இன்றுகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.