செய்திகள்

வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி

வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலியானார்.

மாலை மலர்

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அஜேஷ் (50). இவர் கோட்டயம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு 9 மணியளவில் இவர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஆடம்பர மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார்.

அதனை நிறுத்துமாறு போலீஸ்காரர் அஜேஷ் சைகை காட்டினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அஜேஷ் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் அஜேஷை கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோட்டயம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.