சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 38). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பவித்ரா (35) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தர்சன் (7), லக்ஷன் (1½) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.
ஊரடங்கு காரணமாக பிரபுவுக்கு கடந்த சில வாரங்களாக சரிவர வேலை கிடைக்கவில்லை. இதனால் கிடைத்த வேலைகளை பார்த்து வந்துள்ளார். எனவே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
தற்கொலை முடிவு இன்று காலை பவித்ராவின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டை திறந்து பார்த்தபோது பவித்ரா மற்றும் 2 குழந்தைகள் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.
உடனே இது குறித்து சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேர்களையும் மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே 2 குழந்தைகளும் இறந்து விட்டன. குடும்ப தகராறில் தனது 2 குழந்தைகளுக்கும் பவித்ரா விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.
பவித்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சின்னமனூர்போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.