செய்திகள்

பொன்னேரியில் தாய்-மகனுக்கு மயக்க ‘ஸ்பிரே’ அடித்து நகை கொள்ளை

பொன்னேரியில் இரவு நேரத்தில் வீட்டில் புகுந்த மர்ம கும்பல் தாய்-மகனுக்கு மயக்க ஸ்பிரே அடித்து நகையை கொள்ளையடித்து சென்றனர்.

மாலை மலர்

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த பி.என்.கண்டிகையை சேர்ந்தவர் பாபு. நேற்று இரவு அவர் வீட்டை பூட்டிவிட்டு தாய் அமராவதியுடன் தூங்கினார். பாபு வீட்டின் முன்பக்க அறையிலும், அமராவதி மற்றொரு அறையிலும் படுத்து இருந்தனர்.

நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து மர்ம கும்பல் புகுந்தனர். அவர்கள் தூங்கிக் கொண்டு இருந்த பாபு, அமராவதி மீது மயக்க ஸ்பிரே அடித்தனர். இதில் அவர்கள் 2 பேருக்கும் மயக்கம் ஏற்பட்டது.

பின்னர் கொள்ளை கும்பல் பீரோவை உடைத்து அதில் இருந்த பொருட்களை வீசி எறிந்தனர். 7 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை சுருட்டி தப்பி சென்றுவிட்டனர்.

இன்று காலை நீண்ட நேரத்துக்கு பின்னர் பாபுவும், அவரது தாய் அமராவதியும் மயக்கம் தெளிந்தது. அப்போது வீட்டில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூட்டிக் கிடந்த வீடுகளில் கைவரிசை காட்டி வந்த கொள்ளை கும்பல் தற்போது துணிச்சலுடன் ஆட்கள் இருக்கும் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

பொன்னேரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் இந்த மாத தொடக்கத்தில் வேறு இடத்துக்கு பணிமாறுதல் ஆகி சென்றுவிட்டார். இதுவரை பொன்னேரி போலீஸ் நிலையத்துக்கு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை. சோழவரம் இன்ஸ்பெக்டர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவரத்தை அடுத்த ஞாயிறு கிராமம், சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெபராஜ். கடைகளுக்கு சிகரெட் சப்ளை செய்யும் ஏஜென்சியில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வருகிறார்.

அவர் மோட்டார் சைக்கிளில் பழைய அலமாதி சாலையில் சென்றார். அப்போது பின்னால் ஆட்டோவில் வந்த 3 பேர் ஜெபராஜை வழிமறித்தனர். அவரை தாக்கி சாலையோரம் முட் புதருக்குள் தூக்கி சென்றனர். அவரது வாயில் துணியை திணித்து கை, கால்களை கட்டிப்போட்டு ரூ. 55 ஆயிரம், செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.

ஜெபராஜின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து மீட்டனர். கொள்ளை குறித்து அவர் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews