செங்குன்றம்:
செங்குன்றம் நாரவாரிகுப்பம் சி.கே.மாணிக்கனார் தெருவைச் சேர்ந்தவர் வேணு (வயது80). இவரது மனைவி லட்சுமி (75). இவருக்கு குமார் (30), முருகன் (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
குமாருக்கு திருமணமாகி அங்குள்ள அண்ணா தெருவில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். முருகன் பெற்றோருடனேயே வசித்து வந்தார்.
முருகனுக்கு கஞ்சா போதை பழக்கம் உள்ளது. 3 வருடத்துக்கு முன்பு முருகனுக்கும் பொன்னேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. முருகன் தினமும் கஞ்சா போதையுடன் வந்து மனைவிக்கு ஆபாச படங்களை காட்டி அதே போல் செக்ஸ் வைத்துக் கொள்ள வற்புறுத்தினார். ஆனால் அவரது மனைவி மறுத்தார். முருகன் தொடர்ந்து வற்புறுத்தவே அந்த பெண், முருகனை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் தனக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் முருகன் வற்புறுத்தினார். கடந்த 1 வருடத்துக்கு முன்பு பொன்னேரியை அடுத்த அரசனூரைச் சேர்ந்த உறவினர் பெண்ணை முருகனுக்கு 2-வது திருமணம் செய்து வைத்தனர்.
2-வது மனைவியிடமும் முருகன் கஞ்சா போதையில் வந்து அதே போல் செக்ஸ் சித்ரவதையில் ஈடுபட்டார். அவருக்கும் ஆபாச படங்களை காட்டினார். இதனால் திருமணமான 2 மாதத்திலேயே 2-வது மனைவியும் அவரை பிரிந்து சென்று விட்டார்.
அதன் பிறகு தினமும் மது குடிக்கவும், கஞ்சா போதை பழக்கத்துக்கும் பணம் கேட்டு பெற்றோரை முருகன் சித்ரவதை செய்து வந்தார். கடந்த 8 மாதங்களாக பெற்றோருக்கு வரும் ரூ.1000 முதியோர் உதவித் தொகையை மது குடிப்பதற்காக கேட்டும் முருகன் சித்ரவதை செய்தார்.
இந்த நிலையில் தனக்கு 3-வது திருமணம் செய்து வைக்குமாறு முருகன் பெற்றோருக்கு தொல்லை கொடுத்து வந்தார்.
கடந்த 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முருகனின் தந்தை வேணு திடீரென்று இறந்து விட்டார். இயற்கை மரணம் என்று கூறி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நேற்று இரவு கஞ்சா போதையில் முருகன் வீட்டுக்கு வந்தார். தனக்கு 3-வது திருமணம் செய்து வைக்குமாறு தாய் லட்சுமியிடம் தகராறு செய்தார். இதில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ஆத்திரம் அடைந்த முருகன், தாயின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இன்று காலை 10.30 மணிக்கு லட்சுமிக்கு மற்றொரு மகன் குமார் டிபன் வாங்கி வந்தார். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அப்போதுதான் தாயை கொலை செய்து விட்டு முருகன் தப்பி ஓடியது தெரிய வந்தது.
சம்பவ இடத்துக்கு மாதவரம் துணை கமிஷனர் கலைச்செல்வன், புழல் உதவி கமிஷனர் பிரபாகர், செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போதுதான் கடந்த வாரம் முருகனின் தந்தை வேணு இயற்கையாக மரணம் அடையவில்லை என்றும் 3-வது திருமணம் செய்து வைக்குமாறு நடந்த தகராறில் முருகனே தந்தையை கழுத்தை நெரித்து கொன்றதும் அம்பலமானது.
இதை லட்சுமி அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இதுபற்றி போலீசில் கூறினால் தனது மகனை போலீசார் பிடித்து சென்று விடுவார்கள். எனவே போலீ சில் சொல்ல வேண்டாம் என்று தடுத்து விட்டார். எனவே அப்போது யாரும் அதை போலீசில் தெரிவிக்க வில்லை. இப்போது போலீ சார் நடத்திய விசாரணையின்போது அக்கம் பக்கத்தினர் இதை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து முருகனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.