கைது 
செய்திகள்

பள்ளிகொண்டா அருகே காதலை கண்டித்ததால் லாரியில் தள்ளி தாய் கொலை- மகன் கைது

பள்ளிகொண்டா அருகே காதலை கண்டித்த தாயை லாரியில் தள்ளி கொலை செய்த கொடூர மகனை போலீசார் கைதுசெய்தனர்.

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் காட்பாடி ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் ஜெயகுமார். இவருடைய மனைவி கலைவாணி (வயது42). இவர்களுக்கு விக்ரம் (22) என்ற மகனும், நர்மதா என்ற மகளும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமார் இறந்து விட்டார்.

இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கலைவாணி தனது மகன் விக்ரமுடன் பள்ளிகொண்டாவை அடுத்த ஒக்கணாபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் கலைவாணி உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

விக்ரமுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. அடிக்கடி தனது தாயுடன் தகராறு செய்து வந்துள்ளார். விக்ரம் ஒரு பெண்னை காதலிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை கலைவாணி கண்டித்துள்ளார். இந்த நிலையில் கலைவாணிக்கும், விக்ரம் காதலிக்கும் பெண் வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விக்ரம் தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது கலைவாணி, மகனின் காதலை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விக்ரம், தனது தாய் கலைவாணியை அடித்து உதைத்தார். இதில் வலிதாங்க முடியாத அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடினார். விக்ரமும் பின்னாடியே சென்றார்.

அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியில் கலைவாணியை அவர் தள்ளினார். இதில் கலைவாணி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியனார்.

பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் கலைவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விக்ரமை கைது செய்தனர்.

பெற்ற தாயை மகனே லாரியில் தள்ளி கொலை செய்த சம்பவம் பள்ளிகொண்டா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.