சேரன்மகாதேவி:
நெல்லை மாவட்டம் ஆய்குடியைச் சேர்ந்தவர் கோமதிநாயகம் (வயது 40). கூலி தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் வீரவநல்லூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். இவர் தினசரி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் கோமதிநாயகம் அவரது தாயார் சுப்புலட்சுமி (65) என்பவருடன் தனியாக வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக கோமதிநாயகம் வேலைக்கு செல்லாமல் மனநிலை பாதிப்படைந்தவர் போல தாயார் சுப்புலட்சுமியிடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று நள்ளிரவு கோமதிநாயகம் குடிபோதையில் வீட்டுக்கு சென்றார். அவரிடம் தாயார் சுப்புலட்சுமி, கடைக்கு போய் பொருட்கள் வாங்கிவரச் சொன்னார். அப்போது கோமதிநாயகம் பொருட்கள் வாங்க மறுத்து தாயாரிடம் தகராறு செய்தார். திடீரென்று அவர் தாயார் சுப்புலட்சுமியின் தலையை பிடித்து சுவற்றில் ஓங்கி அடித்தார். இதில் மயங்கி விழுந்த சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தாய் இறந்தது கூட தெரியாமல் கோமதிநாயகம் குடிபோதையில் தனது அறையில் படுத்துக்கொண்டார்.
இன்று அதிகாலை அருகில் உள்ளவர்கள் வீடு திறந்து கிடந்ததால் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு சுப்புலட்சுமி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வீரவநல்லூர் போலீசார் விரைந்து சென்று சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கோமதிநாயகத்தை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் குடிபோதையில் தாயாரை அடித்துகொலை செய்ததை ஒப்புக்கொண்டார் இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.