செய்திகள்

பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு: தாயார் அற்புதம்மாள் தகவல்

பரோலில் வந்த பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன் என்று அவரது தாய் அற்புதம்மாள் கூறினார்.

மாலை மலர்

ஜோலார்பேட்டை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

பேரறிவாளன், தனது தந்தை ஞானசேகரன் என்கிற குயில் தாசனுக்கு உடல் நலம் சரியில்லாததால் பரோலில் விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

இந்த நிலையில், பேரறிவாளனை 30 நாள், அதாவது ஒரு மாத பரோலில் விடுவிக்க மாநில அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.

மேலும் பரோல் காலத்தில் அவருக்கு உறுதியான போலீஸ் ‘எஸ்காட்’ உடன் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நகல் வேலூர் மத்திய ஜெயில் கண்காணிப்பாளருக்கு நேற்றிரவு கிடைத்தது.

இதை தொடர்ந்து, இரவு 8.54 மணிக்கு பேரறிவாளன், வேலூர் ஜெயிலில் இருந்து பரோலில் வெளியே வந்தார்.

அவரை, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பழனி செல்வம் தலைமையிலான போலீசார், மத்திய ஜெயிலில் இருந்து போலீஸ் வாகனத்தில் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு அழைத்து சென்றனர்.

ஜோலார்பேட்டையில் நாட்டறம்பள்ளி சாலையில் உள்ள கடை தெரு என்கிற இடத்தில் பேரறிவாளனின் வீடு உள்ளது.

இரவு 10.30 மணியளவில் வீட்டிற்கு சென்ற அவரை, பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்ணீர் மல்க வர வேற்றனர்.

தாய் அற்புதம்மாள், கற்பூர ஆரத்தி எடுத்து மகன் பேரறிவாளனை வீட்டிற்குள் அழைத்து சென்றார். இரவு முழுவதும் கிராம மக்கள் ஏராளமானோர் பேரறிவாளனை காண்பதற்காக அவரது வீட்டின் முன்பு திரண்டிருந்தனர்.

குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பழனி செல்வம் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 11 போலீசார், பேரறிவாளனு க்கு ‘எஸ்காட்’ பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.

பேரறிவாளனின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக டி.எஸ்.பி. உள்பட 11 போலீசாரும், 24 மணி நேரமும் அவரை சுற்றிலும் கண்காணிக்கிறார்கள்.

பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் சுழற்சி அடிப் படையில் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள். பேரறிவாளனை சந்திப்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு பரோலில் வெளி உலகை பார்க்கும் வாய்ப்பு பேரறிவாளனுக்கு கிடைத்த போதிலும், வீட்டை விட்டு வெளியில் செல்ல அவருக்கு அனுமதியில்லை.

திருவிழா கூட்டங்களில் பங்கேற்க கூடாது. பத்திரிகை மற்றும் டி.வி.க்கு பேட்டி அளிக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தினசரி கையெழுத்து போட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி ஜோலார்பேட்டை போலீசார் பேரறிவாளன் வீட்டிற்கு சென்று இன்று காலை 10 மணியளவில், அவரிடம் கையெழுத்து வாங்கினர்.

பேரறிவாளன் இன்று காலை தோசை, இட்லி, சட்னி என வழக்கமான உணவை எடுத்து கொண்டார். மகனுக்காக தாய் அற்புதம்மாளே சாப்பாடு செய்து கொடுத்தார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரது தந்தை குயில்தாசன், திருமணமாகி கிருஷ்ணகிரியில் கணவருடன் வசித்து வரும் அக்காள் பொற்கொடி மற்றும் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக இருக்கும் தங்கை அருள்,  உறவினர்களிடம் பேரறிவாளன் பேசி மகிழ்ந்தார்.

பேரறிவாளினின் தாய் அற்புதம்மாள் கூறியதாவது :-

20 வயதாக இருக்கும் போது ஜெயிலுக்கு சென்ற பேரறிவாளன், 26 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகு வெளியே வந்துள்ளார்.

தற்போது அவருக்கு 46 வயதாகிறது. பரோலில் மகன் விடுவிக்கப்பட்டுள்ளது தற்காலிக மகிழ்ச்சி தான். நிரந்தரமாக அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மகன் பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன். திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. பெண் பார்த்து வருகிறோம். சொந்தத்தில் பெண் இல்லை.

வெளியில் பெண் தேடுகிறோம். வரன் அமைந்து விட்டால், பரோல் முடியும் 30 நாட்களுக்குள், பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைப்போம்.

இதற்கிடையே, பேரறிவாளனை சந்திக்க வந்திருந்த அவரது நண்பரான சென்னை அம்பத்தூரை சேர்ந்த சண்முகம் கூறியதாவது:-

26 ஆண்டுகளாக ஜெயிலில் அடைபட்டிருந்த பேரறிவாளன் பரோலில் முதன் முதலாக வெளி உலகத்தை காண்கிறார். இந்த முதல் வெற்றியின் மூலம் அவர் நிச்சயம் நிரந்தர விடுதலை பெறுவார்.

சட்டம் படிக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் விரைவில் நிறைவேறும் என்றார்.