செய்திகள்

தலையில் கல்லைப் போட்டு மாமியாரை கொன்ற மருமகன் கைது

திருவள்ளூர் அருகே மது குடிக்க பணம் தராததால் தலையில் கல்லைப்போட்டு மாமியாரை கொன்ற மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பீமன்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதியம்மாள் (80). இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

பார்வதியம்மாளின் கடைசி மகள் நாகபூ‌ஷணம் (55), அவரது கணவர் ராதா கிருஷ்ணன் (59) ஆகியோர் பீமந்தோப்பு கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

அவர்களுடன் பார்வதியம்மாள் வசித்துவந்தார். ராதா கிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், தினமும் குடித்துவிட்டு வந்து மாமியார் மற்றும் மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் நாகபூ‌ஷணம், ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த ராதா கிருஷ்ணன் மாமியார் பார்வதியிடம் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

பணம் கொடுக்க பார்வதி மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன், அருகில் இருந்த ஆட்டுக்கல்லை எடுத்து பார்வதியம்மாள் தலையில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

பலத்த காயமடைந்த பார்வதி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், பார்வதியின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.